உறுப்பினர் சந்தா கட்டாததால் டப்பிங் யூனியனிலிருந்து சின்மயி நீக்கம்



-சுப்ரமணி

தமிழகத்தில் #MeToo இயக்கத்தை தொடங்கி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம்சாட்டிய பாடகி சின்மயி, இரண்டு வருடங்களாக உறுப்பினர் சந்தா கட்டாததால் டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தாம் நீக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், " நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது. நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் உறுப்பினர் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் நீக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது. நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும், இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. தமிழில் '96 தான்  எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று உருக்கமாகக்  கூறியுள்ளார்.

Comments